

மலையகத்திலிருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட பொறியியற்துறை
மாணவர்களை உருவாக்குவதற்குக் காரணமாகவிருந்த ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் கணிதத்துறை ஆசிரியர் கே.ஜீவராஜன் நேற்று 8 ஆம் திகதி மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
வகுப்பில் நேற்றுக் கற்பித்துக் கொண்டிருந்த வேளை, திடீரென மயக்கமுற்றுக் கீழே விழுந்த இவர், உடனடியாக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றபோது உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1995 ஆம் ஆண்டிலிருந்து ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் உயர்தர கணிதத்துறையில் கல்விக் கற்பித்து வந்த இவரிடம் பயின்ற 200க்கும் மேற்பட்ட மலையக மாணவர்கள் தற்போது பொறியியலாளர்களாக உள்ளனர். மேலும் பல மாணவர்கள் பல்வேறு துறைகளில் பதவி வகித்து வருகின்றனர்.
இவர் பல வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் பெற்று, வெளிநாடுகளுக்கும் சென்று வந்தவராவார். ஹட்டன் கல்வி வலயத்தின் கணிதப்பாட ஆசிரியர் ஆலோசகராகவும் இவர் சேவையாற்றியுள்ளார்.
ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சர்வதேச ஒலிம்பியாட் கணிதத்திறன் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சர்வதேச ஒலிம்பியாட் கணிதத்திறன் போட்டியில் ஹைலண்ஸ் கல்லூரி மாணவர் ஒருவர் இலங்கைக்கு வெண்கலப் பதக்கமொன்றைப் பெற்றுத் தருவதற்கும் இவரே காரணகர்த்தாவாவார்.
மலையகத்தமிழ்க் கல்வித்துறை வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஆசிரியர் ஜீவராஜனின் இழப்பு ஈடுசெய்ய முடியாததொன்றாகும்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை 10 ஆம் திகதி ஹட்டனில் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்படுகிறது. (நன்றி-வீரகேசரி)
அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக