Exam

ஞாயிறு, 4 ஜனவரி, 2009

பெற்றோரின் வரட்டு கௌரவத்திற்கு பிள்ளைகளா கிடைத்தார்கள்?

இயந்திரதனமான இன்றைய உலகில் நாம் நமது பிள்ளைகளையும் நமது வரட்டு கௌரவத்திற்கு இரையாக்கி விடுகின்றோமே என்ற அச்சமே எனக்கு ஏற்படுகின்றது. இன்று 3 வயது நிரம்பியவுடன் பிள்ளைகளை இந்தத் பெற்றோர் படுத்தும் பாடு இருக்கின்றதே. அதைப்பற்றி தான் இன்று எழுத உள்ளேன்.

கற்றல் என்பது ஒவ்வொரு பிள்ளையின் உளவளர்ச்சி சார்ந்த ஒன்று. எல்லாப்பிள்ளைகளும் ஒரே அளவில் அறிவினை உள்வாங்குவதில்லை. ஆனால் அதை எத்தனைப் பெற்றோர்கள் சரிவரப் புரிந்து கொள்கின்றார்கள்? இங்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வகுப்பில் சரியாக மதிப்பெண் எடுக்கவில்லை என்பதால் அந்தப் பிள்ளைகளை படுத்தும் பாடு இருக்கின்றதே???? உண்மையில் பாவம் அந்தப் பிஞ்சுகள். பாடசாலையில் வைத்தே சில பெற்றோர்கள் மற்ற பிள்ளைகளுக்கு முன்பு பிள்ளைகளை அடிப்பதும் ஏசுவதும். அந்தச் சின்னஞ்சிறு மழலைகளுக்கு என்ன தான் தெரியும். பயம் கலந்த முகத்துடன் அவர்கள் போகும் போது மனது வலிக்கின்றது.

அதிலும் ஆண்டு 5 ற்கான புலமைப் பரிசில் தேர்வு இருக்கின்றதே! அதற்கு ஆண்டு 3ல் இருந்தே தயார்படுத்த தொடங்கி விடுகின்றார்கள். ஆண்டு 3ல் இருந்தே அந்தப்பிள்ளைகள் இயந்திரமாகிவிடுகின்றார்கள் இல்லை இல்லை இயந்திரமாக்கி விடுகின்றார்கள் பெற்றோர் என்பதே உண்மை.

நான் சமீபத்தில் சில பெற்றோரிடம் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்கள் என்னிடம் கூறிய கருத்துரைகள் என்னை வேதனையின் விளிம்பிற்கு கொண்டு சென்றது.
அதாவது அவர்கள் சொல்லும் கருத்து ”தன்ர பிள்ளை மார்க் எடுத்தால் தனக்கு மதிப்பாம், அப்பதான் நாளைக்கு மற்றவையளிட்ட தாங்கள் பெருமையடித்துக் கொள்ளலாமாம், இது தங்கட கௌரவப் பிரச்சினையாம்”.

அட அறிவிழி பெற்றோரோ! உங்கட வரட்டு கௌரவத்திற்கும் பிள்ளையிட படிப்பிற்கும் என்ன தொடர்பு? நீங்கள் பீற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஏன் அந்த மழலைகளை கொடுமைப்படுத்துகின்றீர்கள்?

அதிலும் பாருங்கள் இந்தச் சனி,ஞாயிறுகளில் காலை 6-7 வரை யோகாசன வகுப்பாம், 7-10 பாடசாலை பாடங்கள் தொடர்பான வகுப்பாம் 10.15 - 12 வரை கணினி வகுப்பாம், 12-1.30 வரை அபாக்கஸ் வகுப்பாம்? பிறகு பி.ப 3-4.30 நடன வகுப்பாம் 4.30- 6 மணி வரை ஆங்கில வகுப்பாம், அதற்குப் பிறகு 6 மணிக்கு களைத்து தோய்த்து போகும் அந்தப் பிஞ்சுகள் பாடசாலையிலும் இந்த வகுப்புகளிலும் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களை வேறு அதற்குப் பிறகு தான் செய்ய வேண்டுமாம். இது தவிர திங்கள் முதல் வெள்ளி வரை பாடசாலை விட்டு வந்தால் அதன் பிறகு வேறு டியுசன் வகுப்புக்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் நான் மேற் சொன்ன நிலை தான் நிழவுகின்றது. அந்தப் பிள்ளைகளின் தாயார் உந்துருளியில் அழைத்து செல்லும் போதே அந்தப்பிள்ளைகள் காலைச் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு செல்லும் நிலையை நான் காண்கின்றேன்.

பிள்ளைகள் டியுசன் சென்று படித்தால் தான் படிக்க இயலும் என்றால் எதற்கு பாடசாலைகள்?
பேசாமல் பாடசாலைகளை பூட்டிவிட்டு டியுசன்களை மட்டுமே நாம் நடத்தலாமே?

பெற்றோர்களே ”என்ற பிள்ளைதான் வகுப்பில 1st என்று நீங்கள் பெருமையடித்துக் கொள்ள அந்தச் சின்னஞ் சிறு மழலைகளை இயந்திர பொம்மைகளாக்கி விடாதீர்கள்.” ”இன்று நமது உலகிற்கு ஒளியைத் தந்த திரு.தாமஸ் அல்வா எடிசன் பாடசாலையில் படிப்பதற்கே தகுதியற்றவர் என்று விரட்டி அடிக்கப்பட்டவர் தான்.” ”பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் முதலிடம் பெற்ற எத்தனையோ பேர் இன்று இருக்கும் இடம் கூட தெரியாமல் உள்ளார்கள். ஆனால் கடைசி வரிசையில் இருந்த எத்தனையோ பேர் இன்று புகழ் பெற்ற மனிதர்களாக உள்ளது உலகறிந்த உண்மை”

உங்களின் பகட்டு ஆசைக்கு அந்தப் பிள்ளைகளை பலியாக்கிவிடாதீ்ர்

3 கருத்துகள்:

அ.மு.செய்யது சொன்னது…

உண்மைதான் தோழா !!!!!

இனிமேலும் பெற்றோர்கள் திருந்துவார்களா ??

அருமையான பதிவு.

பெயரில்லா சொன்னது…

good one
useful for me as a father

joseph
www.ezdrivingtest.com

காரூரன் சொன்னது…

குழந்தைகள் கௌரவ சின்னமாக பெற்றோர் பார்ப்பது தவறு.
இதை வாசித்து ஒலி இணைப்பையும் கேளுங்கள்.

http://akathy.blogspot.com/2008/12/blog-post_20.html