Exam

சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜனவரி, 2009

பெற்றோரின் வரட்டு கௌரவத்திற்கு பிள்ளைகளா கிடைத்தார்கள்?

இயந்திரதனமான இன்றைய உலகில் நாம் நமது பிள்ளைகளையும் நமது வரட்டு கௌரவத்திற்கு இரையாக்கி விடுகின்றோமே என்ற அச்சமே எனக்கு ஏற்படுகின்றது. இன்று 3 வயது நிரம்பியவுடன் பிள்ளைகளை இந்தத் பெற்றோர் படுத்தும் பாடு இருக்கின்றதே. அதைப்பற்றி தான் இன்று எழுத உள்ளேன்.

கற்றல் என்பது ஒவ்வொரு பிள்ளையின் உளவளர்ச்சி சார்ந்த ஒன்று. எல்லாப்பிள்ளைகளும் ஒரே அளவில் அறிவினை உள்வாங்குவதில்லை. ஆனால் அதை எத்தனைப் பெற்றோர்கள் சரிவரப் புரிந்து கொள்கின்றார்கள்? இங்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வகுப்பில் சரியாக மதிப்பெண் எடுக்கவில்லை என்பதால் அந்தப் பிள்ளைகளை படுத்தும் பாடு இருக்கின்றதே???? உண்மையில் பாவம் அந்தப் பிஞ்சுகள். பாடசாலையில் வைத்தே சில பெற்றோர்கள் மற்ற பிள்ளைகளுக்கு முன்பு பிள்ளைகளை அடிப்பதும் ஏசுவதும். அந்தச் சின்னஞ்சிறு மழலைகளுக்கு என்ன தான் தெரியும். பயம் கலந்த முகத்துடன் அவர்கள் போகும் போது மனது வலிக்கின்றது.

அதிலும் ஆண்டு 5 ற்கான புலமைப் பரிசில் தேர்வு இருக்கின்றதே! அதற்கு ஆண்டு 3ல் இருந்தே தயார்படுத்த தொடங்கி விடுகின்றார்கள். ஆண்டு 3ல் இருந்தே அந்தப்பிள்ளைகள் இயந்திரமாகிவிடுகின்றார்கள் இல்லை இல்லை இயந்திரமாக்கி விடுகின்றார்கள் பெற்றோர் என்பதே உண்மை.

நான் சமீபத்தில் சில பெற்றோரிடம் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்கள் என்னிடம் கூறிய கருத்துரைகள் என்னை வேதனையின் விளிம்பிற்கு கொண்டு சென்றது.
அதாவது அவர்கள் சொல்லும் கருத்து ”தன்ர பிள்ளை மார்க் எடுத்தால் தனக்கு மதிப்பாம், அப்பதான் நாளைக்கு மற்றவையளிட்ட தாங்கள் பெருமையடித்துக் கொள்ளலாமாம், இது தங்கட கௌரவப் பிரச்சினையாம்”.

அட அறிவிழி பெற்றோரோ! உங்கட வரட்டு கௌரவத்திற்கும் பிள்ளையிட படிப்பிற்கும் என்ன தொடர்பு? நீங்கள் பீற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஏன் அந்த மழலைகளை கொடுமைப்படுத்துகின்றீர்கள்?

அதிலும் பாருங்கள் இந்தச் சனி,ஞாயிறுகளில் காலை 6-7 வரை யோகாசன வகுப்பாம், 7-10 பாடசாலை பாடங்கள் தொடர்பான வகுப்பாம் 10.15 - 12 வரை கணினி வகுப்பாம், 12-1.30 வரை அபாக்கஸ் வகுப்பாம்? பிறகு பி.ப 3-4.30 நடன வகுப்பாம் 4.30- 6 மணி வரை ஆங்கில வகுப்பாம், அதற்குப் பிறகு 6 மணிக்கு களைத்து தோய்த்து போகும் அந்தப் பிஞ்சுகள் பாடசாலையிலும் இந்த வகுப்புகளிலும் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களை வேறு அதற்குப் பிறகு தான் செய்ய வேண்டுமாம். இது தவிர திங்கள் முதல் வெள்ளி வரை பாடசாலை விட்டு வந்தால் அதன் பிறகு வேறு டியுசன் வகுப்புக்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் நான் மேற் சொன்ன நிலை தான் நிழவுகின்றது. அந்தப் பிள்ளைகளின் தாயார் உந்துருளியில் அழைத்து செல்லும் போதே அந்தப்பிள்ளைகள் காலைச் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு செல்லும் நிலையை நான் காண்கின்றேன்.

பிள்ளைகள் டியுசன் சென்று படித்தால் தான் படிக்க இயலும் என்றால் எதற்கு பாடசாலைகள்?
பேசாமல் பாடசாலைகளை பூட்டிவிட்டு டியுசன்களை மட்டுமே நாம் நடத்தலாமே?

பெற்றோர்களே ”என்ற பிள்ளைதான் வகுப்பில 1st என்று நீங்கள் பெருமையடித்துக் கொள்ள அந்தச் சின்னஞ் சிறு மழலைகளை இயந்திர பொம்மைகளாக்கி விடாதீர்கள்.” ”இன்று நமது உலகிற்கு ஒளியைத் தந்த திரு.தாமஸ் அல்வா எடிசன் பாடசாலையில் படிப்பதற்கே தகுதியற்றவர் என்று விரட்டி அடிக்கப்பட்டவர் தான்.” ”பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் முதலிடம் பெற்ற எத்தனையோ பேர் இன்று இருக்கும் இடம் கூட தெரியாமல் உள்ளார்கள். ஆனால் கடைசி வரிசையில் இருந்த எத்தனையோ பேர் இன்று புகழ் பெற்ற மனிதர்களாக உள்ளது உலகறிந்த உண்மை”

உங்களின் பகட்டு ஆசைக்கு அந்தப் பிள்ளைகளை பலியாக்கிவிடாதீ்ர்

திங்கள், 10 நவம்பர், 2008

பாதையில் நடந்து செல்வோருக்கும் அனுமதி அட்டை

இன்றைக்கு நான் ரொம்பநாளாக எழுத நினைத்த கருத்தினை எழுத உள்ளேன். உலகம் முழுவதும் பார்த்தீர்களேயானால் வாகனம் ஓட்டுபவர்கள் அனுமதி அட்டை (லைசென்ஸ்) எடுக்க வேண்டும். ஏன் விமானம் ஓட்டுபவர்கள் கூட விமான அதற்கான அனுமதி அட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் நாம் யாரும் இந்தப் பாதையில் நடந்து செல்பவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களும் வாகனங்களைப்பற்றியோ விதிமுறைகளைப் பற்றியோ கவலைப்படுவதில்லை (மற்ற நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியாது எம் நாட்டைப்பற்றி மட்டுமே எனது வவுனியாவின் நிலையைப்பற்றி மட்டுமே நான் இங்கு குறிப்பிடுகின்றேன்).

இங்கு ஆடு மாடுகள் கூட சற்று வரும் வாகனங்களைப் பார்த்து சற்று நின்று தான் செல்கின்றன. ஆனால் பாதசாரிகள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. மஞ்சள் கோடுகள் எதற்கு வரைந்துள்ளார்கள் என்பதைப்பற்றியும் சிந்தனையில்லை. இன்று வவுனியா பிரதேசத்தில் அதிகமான விபத்துக்கள் இந்தப் பாதசாரிகளின் கவனக்குறைவாளும் விதிமுறைகளை மீறுவதாலும் தான் நடைபெறுகின்றது.

இதை தவிர்க்க முதலில் பாதசாரிகளுக்கு சாலை விதிமுறைகளைப்பற்றி வகுப்புகள் எடுக்கப்பட்டு விழிப்புணர்ச்சி ஊட்டப்பட்டு தேர்வு வைத்து அனுமதி அட்டை வளங்கப்பட வேண்டும். அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே தெருக்களில் நடமாட முடியும். மற்றவர்கள் கழுத்தில் ஓர் L board ஐ மாட்டிக் கொண்டு திரிய வேண்டும். அனுமதி பெற்றவர்கள் சரியாக விதிமுறைகளைப் பின்பற்றாவிற்றால் அவர்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட வேண்டும்.

வீதியில் ஓர் விபத்து நடந்தால் பாய்ந்தடித்து ஓடி வரும் போக்குவரத்து பொலீசாரே, இவற்றை சற்று கருத்தில் எடுத்துக் கொள்ளுங்களேன். வீதி விபத்தை தடுப்பீர்.

(இன்று காலையில் கணவன் மற்றும் நிறைமாத கர்ப்பினிப் பெண் ஆகியோர் பயனித்த உந்துருளியொன்றின் குறுக்கே ஓடிய ஓர் இளம் பெண்ணினால் விபத்து ஏற்பட்டு அந்த நிறைமாத கர்ப்பினிப் பெண் துடித்த துடிப்பினை பார்த்து, மனவேதனையில் இந்தப் பதிவினை நான் எழுதினே்)

கால் நடையாக செல்வோரே நீங்கள் கால் நடையாகத்தான் செல்கின்றீர்கள், ஆனால் நீங்கள் “கால்நடை” இல்லையே???????? மனிதர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

புதன், 29 அக்டோபர், 2008

பகிடிவதையாம். எங்கே பகிடி? வதை மட்டுமே இங்கு!.

என் அன்பிற்குரிய இளைய சமுதாயமே!
நாம் பல்கலைக்கழகம் செல்வது படித்து பட்டம் பெறவே. எம் ஆழ்மனதில் இருக்கும் காட்டுமிராண்டித்தனமான மிருகங்களை வெளிப்படுத்தும் இடம் பல்கலைக்கழகம் அல்ல. ரேக்கிங் என்று சொல்லக் கூடிய பகிடி(வதை) என்பது புதிதாக வரும் மாணவர்களை தங்களுடன் நட்பு ரீதியாக சேர்த்துக்கொள்ள 2ஆம் 3ஆம் ஆண்டு மாணவர்கள் அவர்களை கிண்டலாக சில நடவடிக்ககைகளை மேற்கொள்ள வைப்பதே. அதனால் புதியவர்களுக்கு கூச்சம் அற்று புதிய சூழலுக்கு தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்பதாலேயே பல்கலைக்கழகமும் அவற்றை அங்கீகரிக்கின்றது.

ஆனால் ராக்கிங் (பகிடிவதை) என்ற பெயரில் இன்று நடைபெறுவது என்ன? எனது மாணவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டால் எனக்கே பயமாக இருக்கின்றது. ஒரு சில மாணவர்கள் தாம் மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டதாகவும். ஏன் அடிக்கின்றார்கள் எதற்கு அடிக்கின்றார்கள் என்று தெரியாமல் அடி வாங்குவதாகவும் கூறினார்கள். இதற்கு பூசா மற்றும் வெலிக்கடை, மகசின் சிறைச்சாலைகள் எவ்வளவோ பரவாயில்லை போலும். ஒரு மாணவர் இவர்களின் அடி தாங்க முடியாமல் தன் கையையே பிளேடால் அறுத்துக் கொண்டுள்ளார். 30 தையல் இடப்பட்டு மருத்துவ மனையில் உள்ளார். இதில் முழுப்பொறுப்பையும் முதுநிலை மாணவர்களின் பாற் சொல்ல முடியாது. ஏனென்றால் எல்லா பல்கலைக்கழகத்திலும் Anti Raking என்ற கொள்கை ஒன்று உள்ளது. நீங்கள் விரும்பா விட்டால் அந்த மாணவனை ராக்கிங் செய்வதில்லை. ஆனால் அதன் பிறகு அந்த மாணவன் ஒதுக்கப்பட்டவனாகக் கருதப்படுகின்ற நிலை. எங்கே தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ என்று இதைப் பல புதியவர்கள் விரும்புவதில்லை (பழைய நோட்ஸ் தரமாட்டார்களாம்). ஆனால் பகிடிவதையின் பெயரால் நடக்கும் கொடுமைகளையும் தாங்க முடியாமல் படிப்பை விட்டவர்கள் பலர். பல்கலைக்கழகத்திற்கு செல்லாமல் வேறு துறைகளை தேர்ந்தெடுத்தவர்கள் பலர் பலர்.

எம் தமிழ் இளைய சமுதாயமே! நாம் எவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியில் தான் படிக்க பல்கலைக்கழகம் செல்கின்றோம். நமது வக்கிர குனங்களை காட்டும் இடம் அதுவல்லவே! எவ்வளவோ ஏக்கங்களுடன் தங்கள் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு கற்பனைச் சிறகுடன் வரும் எம்தமிழ் உறவுகளை நீங்களே இவ்வாறு நடத்தலாமா?

நான் எல்லா முதநிலை மாணவர்களையும் குறை சொல்லவில்லை. இங்கு யாரையும் குறை சொல்லவும் வரவில்லை. என் மன ஆதங்கத்தை வெளியிட்டேன். அவ்வளவு தான்.

புதிதாய் பல்கலைக்கழகம் செல்லும் இளையவர்களே! நீங்கள் படும் இன்னல்களை அடுத்த வருடம் உட்புகும் உங்கள் உறவுகளுடன் காட்டாதீர்கள். இது மாமியார் மருமகள் கொடுமையில்லையே? தான் பட்டதை தன் மருமகளிடம் காட்டுவதை போல். நீங்கள் அனுபவிக்கும் இன்னல்களை உங்களுக்கு இளையவரிடம் நீங்கள் காட்டமாட்டோம் என்று உறுதி பூண்டால் தான் இந்தப் பிரச்சினை நிறைவேறும். அதை விட்டும் நான் அனுபவித்த கொடுமையவிட வரும் ஆண்டு வரும் மாணவர் இன்னும் அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இது தீராது. அதன் பிறகு எங்களைப் போன்றவர்களிடம் வந்து புலம்பாதீர்கள்.
புதியவர்கள் உங்கள் உறவுகள். உங்கள் சகோதரர்கள். நம் இனத்தவர்கள். அவர்களை நாமே வேதனைப்படுத்தலாமா? வேண்டாமே!

சனி, 11 அக்டோபர், 2008

இந்து சமயத்தினரை வேதனைப்படுத்தாதீர்

சற்று முன்னர் தான் விஜய் தொலைக்காட்சியில் “ஜோடி நொம்பர் 1-சீசன் 3” பார்த்தேன். அதில் ஒரு ஜோடியினர் கிருஸ்ணர் வேடமிட்டு ஆடிய நிகழ்வை பார்த்த போது சற்று அதிர்ந்து தான் போனேன். என்ன இந்துசமயத்தின் கடவுகள் இவர்களுக்கு கேலிப் பொருட்களா? நான் கேட்கின்றேன் இவர்களால் மற்ற மதங்களின் கடவுள்களை இவ்வாறு கேலிப்பொருட்களாக ஆக்க இயலுமா என்று? இன்றைய திரைப்படங்களிலும், நாடகங்களிலும் ஏன் இந்து மதக்கடவுள்களையே கோமாளிகளாக காட்டும் நிலை உள்ளது. இது இந்த சமயத்தில் உள்ள சமயப்பெரியவர்கள் என்றுச் சொல்லிக்கொள்பவர்கள் பேசா மடந்தைகளாக இருப்பதாலா? அல்லது இந்த மதத்தினரின் பொறுமையை இவ்வாறு கேலிக்குள்ளாக்குபவர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றார்களா? இதில் என்ன வேதனை என்றால் இவ்வாறு கேலிக்குள்ளாக்குபவர்கள் வேறு யாருமல்ல இந்து மதத்தைச் சார்ந்தவர்களே!

“நபிகள் நாயகத்தின்” திருவுருவப்படத்தை கேலிக்குரியதாக்கியதற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர்களின் எதிர்ப்பை அவ்வாறு ஆக்கியவர்கள் சந்தித்தனர். கிறித்துவமதத்தை பற்றி எழுதிய சாலமன் ருஸ்டியின் நிலையை யாவரும் அறிந்ததே. ஆனால் தொன்மையான இந்து மதத்தின் கடவுள்களை இந்தத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் கேலிக்குரியதாக்குவது பற்றி அதன் தலைவர்கள் மௌனம் காப்பது ஏன்? அவர்களுக்கு இதைவிட வேறு முக்கிய வேலைகள் ஏதும் உள்ளனவோ? மற்ற மதத்தினர் போல உலகம் தழுவிய, நாடு தழுவிய போரட்டங்களை நடாத்தத் தேவையில்லை. ஆகக்குறைந்தது ஒரு கண்டன அறிக்கையையாவது அவர்கள் வெளியிடலாம் தானே! வேறு எந்த மதத்திலும் உள்ளவர்கள் தங்கள் மதத்தைப்பற்றி வெளியாரிடம் குறை கூறுவதில்லை நம் இந்துக்களைத் தவிர, அதிலும் குறிப்பாக தமிழர்கள் தான் இவ்வாறு உள்ளோம்.

இனி வரும் காலங்களில் ஆவது நாம் நமது மதத்தை பெருமைப் படு்த்தாவிட்டாலும் பரவாயில்லை, சிறுமைப்படுத்தக் கூடிய பிறர் பார்த்து கேலியாய் சிரிக்கும் அளவிற்கு சித்தரிக்காமல் இருந்தாலே போதும்.
செய்வார்களா???????????????????????????????????????????

திங்கள், 28 ஜனவரி, 2008

ஆபாச கூடங்களாக மாறும் இணைய சேவை மையங்கள்

இன்று எமது பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் சொர்க்கபுரியாக இருப்பது பிரவுசிங் சென்ரர்கள் (மன்னிக்கவும சரியான தமிழ் பதம் தெரியவில்லை) தான். இங்கு போகும் இளைய சமூகத்தினர்களில் பலர் செல்லும் தளங்கள் ஆபாச தளங்களாகவே உள்ளது என்பது மனவேதனையை ஏற்படுத்துகின்றது. சில பிரவுசிங் சென்ரர்களில் ஆபாச வீடியோ கோப்புக்களை உரிமையாளர்களே பதிந்தும் வைத்துள்ளனர். அறிவையம் விஞ்ஞானத்தின் தகவல் தொடர்பாடல் வளர்சியை நாம் உபயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் இச்சீர்கேடுகள் நம்மை நமது கலாச்சாரத்திற்கு அப்பால் இட்டுச் சென்று விடுமோ என்று அச்சமாக உள்ளது. வெளிநாடுகளில் இதுவெல்லாம் சகஜம் என்று சப்புக்கட்டு கட்டுபவர்கள் ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். அங்கு எல்லாம் சகஜம் தானே! எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய வயதில் தெரிந்து கொள்ளும் விதத்தில் தெரிந்தால் அது சுவராசியமாக இருக்கும். இன்றை விவாகரத்துக்களுக்கு வித்திடுவதில் இதுவும் ஒரு காரணமாக உள்ளது. ஆபாச திரைப்படங்களை ஒழிக்க நினைக்கும் பலர் ஏன் இவ்மையங்களை கண்டு கொள்வதில்லை.
இதற்கான தீர்வு தான் என்ன?
  1. இணைய சேவை மையங்களில் கட்டாயம் இணைய வடி கட்டி மென் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
  2. சிறுவர்களை தனிமையாக அனுமதிக்க கூடாது.
  3. 4-4 அடைப்புக்களை கட்டாயம் நீக்க வேண்டும்.

செய்யுமா அரசு ????