Exam

புதன், 29 அக்டோபர், 2008

பகிடிவதையாம். எங்கே பகிடி? வதை மட்டுமே இங்கு!.

என் அன்பிற்குரிய இளைய சமுதாயமே!
நாம் பல்கலைக்கழகம் செல்வது படித்து பட்டம் பெறவே. எம் ஆழ்மனதில் இருக்கும் காட்டுமிராண்டித்தனமான மிருகங்களை வெளிப்படுத்தும் இடம் பல்கலைக்கழகம் அல்ல. ரேக்கிங் என்று சொல்லக் கூடிய பகிடி(வதை) என்பது புதிதாக வரும் மாணவர்களை தங்களுடன் நட்பு ரீதியாக சேர்த்துக்கொள்ள 2ஆம் 3ஆம் ஆண்டு மாணவர்கள் அவர்களை கிண்டலாக சில நடவடிக்ககைகளை மேற்கொள்ள வைப்பதே. அதனால் புதியவர்களுக்கு கூச்சம் அற்று புதிய சூழலுக்கு தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்பதாலேயே பல்கலைக்கழகமும் அவற்றை அங்கீகரிக்கின்றது.

ஆனால் ராக்கிங் (பகிடிவதை) என்ற பெயரில் இன்று நடைபெறுவது என்ன? எனது மாணவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டால் எனக்கே பயமாக இருக்கின்றது. ஒரு சில மாணவர்கள் தாம் மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டதாகவும். ஏன் அடிக்கின்றார்கள் எதற்கு அடிக்கின்றார்கள் என்று தெரியாமல் அடி வாங்குவதாகவும் கூறினார்கள். இதற்கு பூசா மற்றும் வெலிக்கடை, மகசின் சிறைச்சாலைகள் எவ்வளவோ பரவாயில்லை போலும். ஒரு மாணவர் இவர்களின் அடி தாங்க முடியாமல் தன் கையையே பிளேடால் அறுத்துக் கொண்டுள்ளார். 30 தையல் இடப்பட்டு மருத்துவ மனையில் உள்ளார். இதில் முழுப்பொறுப்பையும் முதுநிலை மாணவர்களின் பாற் சொல்ல முடியாது. ஏனென்றால் எல்லா பல்கலைக்கழகத்திலும் Anti Raking என்ற கொள்கை ஒன்று உள்ளது. நீங்கள் விரும்பா விட்டால் அந்த மாணவனை ராக்கிங் செய்வதில்லை. ஆனால் அதன் பிறகு அந்த மாணவன் ஒதுக்கப்பட்டவனாகக் கருதப்படுகின்ற நிலை. எங்கே தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ என்று இதைப் பல புதியவர்கள் விரும்புவதில்லை (பழைய நோட்ஸ் தரமாட்டார்களாம்). ஆனால் பகிடிவதையின் பெயரால் நடக்கும் கொடுமைகளையும் தாங்க முடியாமல் படிப்பை விட்டவர்கள் பலர். பல்கலைக்கழகத்திற்கு செல்லாமல் வேறு துறைகளை தேர்ந்தெடுத்தவர்கள் பலர் பலர்.

எம் தமிழ் இளைய சமுதாயமே! நாம் எவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியில் தான் படிக்க பல்கலைக்கழகம் செல்கின்றோம். நமது வக்கிர குனங்களை காட்டும் இடம் அதுவல்லவே! எவ்வளவோ ஏக்கங்களுடன் தங்கள் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு கற்பனைச் சிறகுடன் வரும் எம்தமிழ் உறவுகளை நீங்களே இவ்வாறு நடத்தலாமா?

நான் எல்லா முதநிலை மாணவர்களையும் குறை சொல்லவில்லை. இங்கு யாரையும் குறை சொல்லவும் வரவில்லை. என் மன ஆதங்கத்தை வெளியிட்டேன். அவ்வளவு தான்.

புதிதாய் பல்கலைக்கழகம் செல்லும் இளையவர்களே! நீங்கள் படும் இன்னல்களை அடுத்த வருடம் உட்புகும் உங்கள் உறவுகளுடன் காட்டாதீர்கள். இது மாமியார் மருமகள் கொடுமையில்லையே? தான் பட்டதை தன் மருமகளிடம் காட்டுவதை போல். நீங்கள் அனுபவிக்கும் இன்னல்களை உங்களுக்கு இளையவரிடம் நீங்கள் காட்டமாட்டோம் என்று உறுதி பூண்டால் தான் இந்தப் பிரச்சினை நிறைவேறும். அதை விட்டும் நான் அனுபவித்த கொடுமையவிட வரும் ஆண்டு வரும் மாணவர் இன்னும் அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இது தீராது. அதன் பிறகு எங்களைப் போன்றவர்களிடம் வந்து புலம்பாதீர்கள்.
புதியவர்கள் உங்கள் உறவுகள். உங்கள் சகோதரர்கள். நம் இனத்தவர்கள். அவர்களை நாமே வேதனைப்படுத்தலாமா? வேண்டாமே!

9 கருத்துகள்:

Nimal சொன்னது…

//ஆனால் அதன் பிறகு அந்த மாணவன் ஒதுக்கப்பட்டவனாகக் கருதப்படுகின்ற நிலை. எங்கே தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ என்று இதைப் பல புதியவர்கள் விரும்புவதில்லை (பழைய நோட்ஸ் தரமாட்டார்களாம்).//

நானும் ஒரு பல்கலைக்கழக மாணவன் தான். எனது அனுபவத்திலும் இதை நான் பாரத்திருக்கிறேன். ஆனால் எனது அனுபவம் இதை பிழை என்றே உணர்த்தியிருக்கிறது.

அதனாலேயே அடுத்த வருட மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை இயன்றளவு தவிர்த்திருக்கிறோம்.

இப்போதும் நான் அறிந்தவகையில் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ராகிங் என்பது குறைவாகவே இருக்கிறது. ஆனாலும் இருக்கிறது :(

ers சொன்னது…

தங்களது வலைப்பூவை நெல்லைத்தமிழ் இணையத்தின் வலைப்பூ பகுதியில் இணைத்திருக்கிறோம். இந்த பக்க முகவரி.
http://blogspot.nellaitamil.com/in/?p=51

பெயரில்லா சொன்னது…

நீங்கள் கூறிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான் சேர். இருப்பினும் இது கூட ஒரு வித படிப்புத்தான். அநுபவப்படிப்பு!!!!!!!!!!!!

S.Lankeswaran சொன்னது…

மிக்க நன்றி நிமல். உங்களைப் போன்ற இளைய சமுதாயம் தான் எல்லாப்பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்ல வேண்டும். வன்முறைகள் அற்ற சமுதாயத்தை உருவாக்க உதவுங்கள்.

S.Lankeswaran சொன்னது…

நெல்லைத்தமிழ் வலைப்பதிவுக்கு மிக்க நன்றிகள் எனது வலைப்பதிவை தங்களின் தளத்தில் இணைத்தற்கு.

S.Lankeswaran சொன்னது…

//இருப்பினும் இது கூட ஒரு வித படிப்புத்தான்.அநுபவப்படிப்பு!!!!!!!!!!!!//


என்னது அநுபவப்படிப்பா. பிரமிளா அவர்களே! ஒருவரிடம் காரணம் தெரியாமல் அடிவாங்குவது உங்களுக்கு அநுபவப்படிப்பா. அது சரி நம்மட நாட்டிற்கு கட்டாயம் தேவையான ஒன்று தான். அது சரி நீங்க எந்த ஊரு. வவுனியா பக்கம் இருந்தா வாங்க கொஞ்சம் நானும் உங்களுக்கு நல்ல மண் போட்டு இருக்கின பட்டையில நாலு சாத்து சாத்தி அநுபவப்படிப்ப சொல்லித்தாரன். LOL.

சுவடுகள்... சொன்னது…

வவுனியாவிலிருந்து திலீப்
இது கண்டிப்பாக கண்டிக்கத்தக்க ஒன்று. ஒருவருடைய உரிமையை மற்றவர்கள் அத்துமீறும் செயல்கள் இவை. ஆக்குரோசத்தை தூண்டி ஒருவரை மற்றவர்கள் மத்தியில் அவமானப்படுத்துவதன் மூலம் சமுதாய சீர்கேடுகளுக்கு வளிவகுக்கின்றது. ஒருவர் வன்முறையை கற்றுக்கொள்வது இங்கு என்றால் அது உண்மைதான்.என்னிடம் இப் பகிடிவதையைப்பற்றி கேட்டால் என்னவோ தெரியவில்லை எனக்கு கேபம்தான் வருகிறது கூடவே என் சகோதர்களின் அறியாமையை நினைத்து கவலையும் வருகிறது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்...

S.Lankeswaran சொன்னது…

//என்னிடம் இப் பகிடிவதையைப்பற்றி கேட்டால் என்னவோ தெரியவில்லை எனக்கு கேபம்தான் வருகிறது கூடவே என் சகோதர்களின் அறியாமையை நினைத்து கவலையும் வருகிறது.//

ஆம் திலீப் கோபப்பட வேண்டும் நிட்சயமாக அநியாயம் எங்கு நடப்பினும் நாமே செய்தாலும் அதற்காக கோபப்பட வேண்டும்.

சோழர் தலைவன் சொன்னது…

உண்மைதான் ஆசிரியரே நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் எனக்கிருந்தது நான் பகிடிவதை அனுபவித்த காலங்களில். ஆனால் இப்போது என் அனுபவத்தை சொல்கின்றேன். பல்கலைக்கழக வாழ்க்கையில் எமக்கு மறக்க முடியாத் காலப்பகுதி என்றால் நிச்சயமாக அது பகிடிவதைக்காலம்தான். பட்டப்படிப்பின் பின்னர் எமக்கு எஞ்சி இருக்கப் போவது பட்டமும் நினைவுகளும் மட்டுமே நண்பர்களைக் கூட பின்னர் காண்பது அரிதகிவிடலாம். இன்று கூட நாங்கள் விடுதியில் பகிடிவதையில் நிகழ்ந்த விடயங்களைப் பற்றி கதைத்து சிரிப்போம்.
இது என் அனுபவம்