Exam

ஞாயிறு, 5 அக்டோபர், 2008

நன்றி கூறுகின்றேன் என் ஆசான்களே!

அக்டோபர் 06 ஆசிரியர் தினம். எமக்கு கல்வியைப் புகட்டிய மனித தெய்வங்களின் தினம் அன்று. இந்த நன்நாளில் நான் ஓர் ஆசிரியனாய் சற்று எனது மாணவப் பருவத்தைத் திரும்பிப்பார்க்கின்றேன்.
1982ல் நேசரி (அரிச்சுவடு வகுப்ப) வகுப்பில் அ, ஆவன்ன கற்றுத்தந்த நேசரி டீச்சர் இன்றும் என் கண்களில் உள்ளார். இப்பொழுதும் அவர் எங்களுடன் இருக்கின்றார் எங்கள் ஊரில் எங்கள் வீட்டிற்கு அருகிலே. அவரிடம் நாம் கற்றது கல்வியை மட்டுமல்ல ஒழுக்கத்தையும் தான். யாரையும் ஏமாற்றுதல் அவருக்கு பிடிக்காது. அவரிடம் நான் கற்றுக் கொண்ட முக்கிய பாடங்களில் ஒன்று அது. அவரிடம் கற்ற யோசானமும், இறை சிந்தனைகளும் இன்றும் நினைவில் உள்ளன.
பின்பு வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் (நாங்கள் படிக்கும் போது வ-கோவிற்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயம்) முதலாம் ஆண்டு தொடக்கம் ஐந்தாம் ஆண்டு வரை கல்வி. இக்காலப்பகுதியில் எனக்கு கற்றுத்தந்த ஆசிரியர்கள் பலர் அவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால். அதிபர்.திரு.தங்கராஜா சேர், திருமதி.வையாபுரிநாதன் டீச்சர், திருமதி.ஓங்காரநாதன் டீச்சர், திரு.சிவஞானம் சேர் (தற்போதைய அதிபர்) , திருமதி.மயில்வாகணம் டீச்சர். திரு.சோதி மாஸ்டர், போன்றோர்கள். இக்காலப்பகுதியில் சங்கீத ஆசிரியர் ஒருவரும் கல்விக்கற்றுத் தந்தார். ஆனால் எனக்கு சங்கீதம் என்றால் வேப்பங்காய் போன்றது. ஆனால் அவர் எனக்கு எப்படியாவது சங்கீத அறிவை ஊட்ட வேண்டும் என்று எவ்வளவு முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை.
1989ல் மகாவித்தியாலயத்தில் 9 மாதங்கள் மட்டுமே கல்வி பயின்றேன். அக்காலப்பகுதியில் கணித கற்பித்த திரு.சிவதாசன் சேர் மறக்க முடியாத ஒருவர். அவரின் டியுசன் சென்டரில் படித்த காலங்கள் மறக்க முடியாதவை தான். அவரிடம் அடிவாங்காமல் தப்பித்த விரல்விட்டு எண்ணக் கூடிய மாணவர்களில் நானும் ஒருவன்.
1990 இந்தியப் பயணம். அங்கு திருச்சி சையது முர்த்துசாவில் கல்வி. முற்றிலும் புதிய சூழ்நிலை. இசுலாமியர்கள் அதிகம் படிக்கும் பாடசாலை. ஆனால் நம் ஊரில் போல் அங்கு சமயம் ஓர் பாடமாக இல்லாதது சற்று நிம்மதி தந்தது. தரம் 6 தொடக்கம் தரம் 10 வரையிலுமான காலப்பகுதியில் அங்கு கல்வி கற்றேன். அந்தக் காலப்பகுதியில் நான் தான் அங்கு ராஜா. இலங்கை மாணவன் என்ற மரியாதை கலந்த அன்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில். அந்தக் காலப்பகுதியில் எனக்கு கணித கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் திருமதி.துளசிபாய் டீச்சர். மிகுந்த சிரத்தையுடனும் அன்புடனும் நான் 100ற்கு 100 எடுக்க வேண்டும் என்று பாடுபட்டார். என் வாழ்வில் மறக்க முடியாத மிகுந்த மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய ஆசிரியர் அவர். ஆனால் என்னால் 98 மதிப்பெண்களே எடுக்க முடிந்தது. கணித தேர்வு நடந்த அன்று மேற்பார்வையாளரால் ஏற்பட்ட சில அசௌகரியங்களே நான் 100 மதிப்பெண்கள் பெற இயலாமல் போனதுக்கு காரணம் என்பதை அறிந்து மிகவும் கவலையடைந்தார்.
அதன் பிறது இரண்டு வருடங்கள் எனது A/L (+2) தேர்விற்காக நான் திருச்சி தேசிய மேல்நிலைப்பள்ளியில் கல்வி கற்றேன். கணினி அறிவியல் பிரில் சேர்ந்தேன். அங்கு ஏனோ எந்த ஆசிரியரும் எனக்கு பெரியாத மனதைக் கவரவில்லை.
1994ல் கல்லூரி வாழ்க்கை ஆரம்பம். திருச்சி உறுமு தனலட்சுமி மாலை நேரக்கல்லூரியில் இளங்கலை கணினி விஞ்ஞானம். இங்கு என் மனதைக் கவர்ந்த விரிவுரையாளர்கள் பலர். அதில் பெரிதும் கவர்ந்தவர்கள் எமது கணினித் துறை தலைவர் திரு.ஆர்.எம்.பி சேர், பௌதிகவியல் துறைத்தலைவர் திரு.சக்திவேல் சேர் அவர்கள் எப்பொழுதும் என் நினைவினில் இருக்கின்றார்கள்.
இன்று நானும் ஓர் ஆசிரியனாய் உங்கள் முன். இந்நிலையில் நான் என்னை ஆளாக்கிய ஆசிரியர்கள் அனைவரையும் நினைத்துப்பார்க்கின்றேன். அவர்களுக்கு இந்த நன்நாளில் நன்றி கூற கடைமைப்பட்டுள்ளேன். அவர்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வணக்கம் இலங்கேஸ்வரன்
உங்கள் பதிவு பல நினைவலைகளை மீட்டுச்சென்றது. வாழ்த்துக்கள்.